Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

தடுப்பூசி மருத்துவத்தின் வரலாறு
தமிழ்வாணன்

நோய்க்கிருமிகளும் தடுப்பு ஊசிகளும்

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டிலே பேராசிரியர் அன்டாயின் பிச்சாம்ப் என்று ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் சர்க்கரைக் கரைசல்களை புளிக்க வைத்து சில விஞ்ஞானப் பரிசோதனைகள் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பரிசோதனைகளின்போது, அவருடைய பூதக் கண்ணாடியிலே மிகவும் நுண்ணியமான சில பொருள்கள் அவர் கண்ணுக்குத் தென்பட்டன. உடனே, தாம் கண்ட அந்த உண்மையை, பிரெஞ்சு விஞ்ஞான அகெடமிக்கு அவர் எழுதியனுப்பினார். அவர் எழுதியனுப்பிய அந்த முதல் குறிப்புத்தான் கிருமி இயல் எனப்படுவது ஒரு புதுமையான விஞ்ஞான ஆராய்ச்சிக்கே அடிப்படையாக அமைந்தது.

எப்படியென்றால், பேராசிரியர் பிச்சாம்பினுடைய அந்தக் குறிப்பானது லூயி பாஸ்டியர் என்னும் இன்னொரு பிரெஞ்சுக்காரருடைய மூளையிலே புகுந்து வேலை செய்யத் தொடங்குகிறது. லூயி பாஸ்டியர் ஒரு விஞ்ஞானி அல்லர். மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்கிற ஒரு வியாபாரி அவர். இருந்தாலும் தன்னை ஒரு விஞ்ஞானி போல எண்ணிக்கொண்டு, அவர் ஒரு புதிய கொள்கையை வெளியிடலானார். அதாவது, கிருமிகள் எனப்படும் எண்ணற்ற நுண்ணிய உயிர்ப்பொருள்கள் காற்றிலே மிதந்து கொண்டு திரிவதாகவும், அந்தக் கிருமிகள்தாம் மனித உடம்பினுள்ளே புகுந்து நோய்களை உண்டு பண்ணுகின்றன என்றும் அவர் கூறினார். எந்த ஒரு விஞ்ஞான உண்மையையும் ஆதாரமாகக் கொண்டு, அவர் அந்த முடிவுக்கு வரவில்லை, வெறும் அனுமானத்தின் பேரிலேயே அவர் அவ்வாறு சொன்னார்.

உங்களுடைய இந்தப் புதுமையான கொள்கையை மெய்ப்பிப்பதற்கான சான்றுகள் யாவை? என்று அக்காலத்து விஞ்ஞானிகள் அவரைக் கேட்டார்கள். நீங்கள் கேட்கும் சான்றுகளை, எதிர்காலத்தில் வரப்போகும் விஞ்ஞானிகள் உங்களுக்கு அளிப்பார்கள்! என்று பதில் சொன்னார் பாஸ்டியர்.

வேறு எவராவது இப்படிச் சொல்லியிருந்தால், அவனை ஒரு பைத்தியக்காரன் என்று ஒதுக்கித் தள்ளியிருப்பார்கள். ஆனால் பாஸ்டியரை அப்படித் தள்ள முடியவில்லை. காரணம் அவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையாய் இருந்தார். சக்கரவர்த்தி லூயி நெப்போலியனுடைய ஆதரவு அவருக்கு இருந்தது. ஆகையால் பாஸ்டியருடைய கொள்கையைப் பிரெஞ்சு விஞ்ஞான அகெடமி பதில் பேசாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியது ஆயிற்று. ஆனால், கிருமிகளை முதன் முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் பிச்சாம்ப், பாஸ்டியரின் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் மேலும் பல விஞ்ஞான ஆராய்ச்சிகளைச் செய்து, புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார். அதாவது, கிருமிகள் எணப்படும் எண்ணற்ற நுண் உயிர்ப் பொருள்கள் காற்றிலே மிதந்து கொண்டிருக்கின்றன என்று பாஸ்டியர் சொன்னார் அல்லவா? காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த நுண்பொருள்கள் கிருமிகள் அல்ல; அவை கிருமிகளைக் காட்டிலும் மிக நுண்ணியனவாகிய மைக்ரஸைமாஸ் என்றார் பிச்சாம்ப். பேராசிரியர் பிச்சாம்ப் கண்டுபிடித்த மைக்ரஸைமாஸ் என்னும் நுண் உயிர்களைத் தூய்மையான இயற்கை உணவுகளிலேயே வளரவிட்டால், இவை (நமது) உடம்பின் செல்களாக மாறுகின்றன.

அதே நுண் உயிர்களை அழுகிக் கொண்டிருக்கும் பொருள்களின் மீது வளரவிட்டால் அவை கிருமிகளாக உருவாகின்றன. எனவே, நாம் தூய்மையான இயற்கை உணவுகளை உட்கொள்வோமாயின், காற்றிலே மிதந்து கொண்டிருந்து நமக்கு உள்ளே செல்லுகின்ற மைக்ரஸைமாஸ் அந்த உணவுகளில் படிந்து செல்லாக மாறி, நம் உடம்பை வளர்க்கின்றன. இறைச்சியோ, அல்லது அதைப் போன்று அழுகிக் கொண்டிருக்கிற வேறு ஏதேனும் உணவையோ நாம் உட்கொள்வோமாயின், அதே மைக்ரஸைமாஸ் அந்த உணவுகளில் படிந்து கிருமிகளாக மாறுகின்றன!

ஆகையால், நம் உடம்பினுள்ளே கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், நாம் தூய்மைகளை நல்ல உணவுகளைச் சாப்பிட்டு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொள்வது ஒன்றேதான் அதற்குரிய வழி என்னும் முடிவுக்கு வந்தார் போராசிரியர் பிச்சாம்ப்.

இந்தக் கொள்கையை வெளியிட்ட இரண்டொரு ஆண்டுகளுக்குள் அவர் இறந்து போய்விட்டார். அப்போது பாஸ்டியரின் செல்வாக்குத்தான் மேலோங்கி நின்றது. ஆகையால் பிச்சாம்பின் கொள்கையானது பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் ஒதுக்கித் தள்ளப்பட்டது.

மருத்துவ விஞ்ஞானிகள் தாங்கள் விரும்புவதையே நம்புகிறார்கள்

கிருமிகளால்தான் நோய்கள் உண்டாகின்றன என்னும் பாஸ்டியரின் சித்தாந்தத்தை அக்காலத்து மருத்துவ விஞ்ஞானிகள் ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது நோய்களின் குணங்களையும் அடையாளங் களையும் பற்றி, அந்த விஞ்ஞானிகள் மிகத் தெளிவாக அறிந்தார்கள். ஆனால், அவற்றின் காரணங்களைக் கண்டு அறியும் முயற்சிகளில் அவர்கள் படுதோல்வி அடைந்து இருந்தார்க ள். அவர்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் அனைத்தும், அத்துறையில் பயன் அற்றவை யாகவே விளங்கின. இது அவர்களுக்கே ஒரு பெரிய தோல்வியாகவும் வெட்கமாகவும் இருந்தது!

மக்கள் முன்னிலையில் தங்களுடைய அந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவதற்கு, பாஸ்டியர் வெளியிட்ட கிருமிக் கொள்கையானது, இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாம் போல் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. எனவே நீரில் மூழ்கிப் சாகப்போகிறவன் ஒரு வைக்கோல் துரும்பைக் கண்டாலும் அதை ஆவலோடு பற்றிக் கொள்ளுவது போல, அக்காலத்து மருத்துவ விஞ்ஞானிகள் பாஸ்டியரின் நோய்க் கிருமிக் கொள்கையை ஆவலோடு பற்றிக் கொண்டார்கள்!

அவர்கள் பற்றிக்கொண்ட அந்த வைக்கோல் துரும்பை வெடுக்கென்று பறிப்பதுபோல் இருந்தது பிச்சாம்பின் மைக்ரஸைமாஸ் கொள்கை. ஆகை யால் அந்தக் கொள்கையை அவர்கள் தங்களுடைய விவாதங்களுக்குகூட எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளி விட்டார்கள்! மனிதன் எப்போதுமே தான் விரும்புவதைத் தான் நம்புகிறானே தவிர, உண்மையை நம்புவது இல்லை என்பது, மன இயல் நியதி. இந்த நியதிக்குத் தாங்கள் மட்டும் விதிவிலக்கு அல்லர் என்பதை, அக்காலத்து மருத்துவ விஞ்ஞானிகள் தெளிவாக மெய்ப்பித்து விட்டார்கள்.

தங்களுடைய சித்தாந்தத்தை மெய்ப்பிப்பதற் கான சான்றுகளை எதிர்கால விஞ்ஞானிகள் அளிப்பார்கள் என்று பாஸ்டியர் கூறி, இப்போது நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்று வரையில் எந்த விஞ்ஞானியும் அந்தச் சான்றுகளை நமக்குத் தரவில்லை.!மாறாக மறுக்கமுடியாத ஆதாரங் களுடன் மெய்ப்பிக்கப் பட்ட ஒரு சித்தாந்தத்தைப் போன்று பாஸ்டியரின் சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக்கொன்று, தொழில் நடத்தி வருகிறார்கள். ஏனெனில், அந்த ஒரு சித்தாந்தத்தை விட்டால், மனித உடலில் ஏன் நோய்கள் தோன்றுகின்றன? என்னும் அடிப்படைக் கேள்விக்கு அவர்களால் இன்றைக்கும் பதில் அளிக்க முடியாது.

அந்த ஒரு பிரச்னையைப் பொறுத்த மட்டில் ஆங்கில மருத்துவ விஞ்ஞானம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் நின்றதோ, அதே இடத்தில்தான் இன்னமும் நின்றுகொண்டு இருக்கிறது. அப்படியிருக்க அது நாளுக்கு நாள் முன்னேறிப் பாய்ந்து வருவதாகக் கூறப்படுவதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?

பாஸ்டியரின் மரண வாக்குமூலம்

பாஸ்டியரின் சித்தாந்தம் சரியானது என்று மெய்ப்பிக்கப்படாதது மட்டும் அல்ல, அது தவறானது என்றும் அவர் காலத்திலேயே மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால், அவரே அதைத் தம் கடைசிக் காலத்தில் ஒப்புக் கொண்டிருக்கின்றார்! விளை நிலத்தில்தான் எல்லாம் இருக்கிறது. கிருமியில் ஒன்றுமே இல்லை (The soil is everything the germ is nothing) என்று அவர்தம் மரணப்படுக்கையில் கிடக்கும்போது கூறியிருக்கிறார்!

இங்கே விளை நிலம் என்பது, உடம்பின் திசுக்கள், ஒரே வகையைச் சேர்ந்த பல செல்களின் தொகுதிக்குத் திசு என்று பெயர். (ஆங்கிலத்தில் இதை (tissue) என்பார்கள். திசுக்கள் நல்ல ஆரோக்கிய நிலையில் இருந்திருந்தாலும், கிருமிகள் உள்ளே புகுந்தால் அந்தத் திசுக்கள் நோயுற்றவை ஆகிவிடுகின்றன என்பது பாஸ்டியரின் சித்தாந்தம்.

அவர் மரணப் படுக்கையில் இருக்கும்போது, தம்முடைய சித்தாந்தத்தைத் தாமே மறுத்து, கிருமிகளால் ஒரு கேடும் விளைவது இல்லை என்னும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். மரணப் படுக்கையில் மட்டும் அல்ல, அதற்கு முன்னமேயேகூட பாஸ்டியர் அதை ஒப்புக்கொள்ள நேர்ந்திருக்கிறது.

உடம்பு ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது கிருமிகள் அதன் உள்ளே நுழைவதில்லை, என அவர் கூறியிருக்கிறார். (பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாக்டர் கூஹிகூ (Doctor Couzigou) என்பவர் எழுதியுள்ள ‘Tuberculosis and vaccinations’ என்னும் நூலில் இது பற்றிய விவரங்களை விரிவாகக் காணலாம். விளை நிலத்தில்தான் எல்லாம் இருக்கிறது என்று அவர் பின்னால் கூறப்போவதற்கு விரிவுரையாகவே, அவருடைய இந்தக் கூற்றை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, உடம்பில் உள்ள திசுக்கள் நல்ல நிலையில் இருந்தால், அந்தத் திசுக்களிலே போய்ப் படிகிற மைக்ரஸைமாஸ் நோய்கூட கிருமிகளாக மாறுவது இல்லை என்பது மட்டும் அல்ல; அம்மை, எலும்பு உருக்கி போன்ற கொடிய நோய்களின் கிருமிகளே அந்தத் திசுக்களில் போய்ப் படிந்தாலுங்கூட, அவை அந்த நோய்களை உண்டுபண்ணுவது இல்லை என்பது நோய்க் கிருமி சித்தாந்தின் முதல் ஆசிரியராகிய லூயிபாஸ்டியரே தம்முடைய கடைசிக் காலத்தில் உளமார ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சித்தாந்தத்தின் கர்த்தாவாகிய பாஸ்டியரே நம் தவறை உணர்ந்து, தாமே தமது சித்தாந்தத்தை மறுத்துப் பேசிய பிறகும்கூட அன்றுமுதல் இன்றுவரை டாக்டர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் அதை ஒதுக்கித் தள்ளாமல் ஆதரித்துப் போற்றி வருகிறார்கள். அந்த ஒரு வைக்கோல் துரும்பையும் கைவிட்டு விட்டால், அப்புறம் வேறு எதைப் பிடித்துக்கொண்டு கரையேறுவது? என்னும் அச்சமே அதற்குக் காரணம் ஆகும்!

டைபாய்டு, எலும்பு உருக்கி, அம்மை, காலரா, ப்ளேக் போன்ற நோய்கள் நிலவும் இடத்தில் நோய்க் கிருமிகளும் நிலவுகின்றன என்பதை எவரும் மறுக்கவில்லை. அந்த நோய்க் கிருமிகள் நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவோ, உண்ணும் உணவின் வழியாகவோ, குடிக்கும் நீரின் வழியாகவோ, நம் உடம்பினுள்ளே புகுந்துவிடக் கூடும் என்பதையும் எவரும் மறுக்கவில்லை. அந்த நோய்க் கிருமிகள் எவ்வளவுதான் நம் உடம்பின் உள்ளே புகுந்தாலும்; நம் உடம்பு மட்டும் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்குமானால், அந்த நோய்க் கிருமிகள் நம்மை ஒன்றுமே செய்வது இல்லை என்பது உறுதி!

கேட்பதற்கு புதுமையாக இருக்கலாம். ஆனால் இதை பாஸ்டியரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை மருத்துவ உலகம் தன் சுயநலத்தின் காரணமாக இருட்டு அடிப்புச் செய்துவிட்டது! பாஸ்டியர் ஒப்புக்கொண்டது மட்டும் அல்ல, பவேரியா நாட்டைச் சேர்ந்த கிருமி இயல் நிபுணராகிய பேராசிரியர் டாக்டர் பெட்டன்கோஃபர் என்பவர், தாமே மேற்கண்ட ஓர் அபாயகரமான பரிசோதனையின் மூலம், 1892ஆம் ஆண்டில் இந்த உண்மையை மெய்ப்பித்துக் காட்டிருக்கிறார். எப்படி என்றால் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களைக் கொல்லக் கூடிய அளவு காலராக் கிருமிகளை, அவர் ஒரு சோதனைக் குழாயில் நிரப்பிக் கொண்டார். பின்னர் ஏராளமான விஞ்ஞானிகள் முன்னிலையில் அந்தக் கிருமிகள் முழுவதையும் அவர் தம் வாயில் கொட்டி விழுங்கிக் காட்டினார்.

சிறிது நேரத்தில் அவருக்குக் காலரா நோய் காணப் போகிறது. அவரும் அநியாயமாக இறந்து விடப் போகிறார் என்று இரக்கமும் - அச்சமும் அடைந்தனர் அந்த விஞ்ஞானிகள். ஆனால் பேராசிரியர் பெட்டன் கோஃபர் இறக்கவும் இல்லை! அவருக்குக் காலராவும் காணவில்லை! காலராக் கிருமிகள் அவரை ஒன்றுமே செய்யவில்லை.

தம் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கக் கூடிய இந்தப் பரிசோதனையின் மூலம் சிறிதும் ஐயம் திரிபுக்கும் இடம் இன்றி அவர் ஒரு பேருண்மையை விளக்கிக் காட்டினார். ஆரோக்கியமான உடம்பிலே எப்பேர்ப்பட்ட பயங்கரமான நோய்க் கிருமிகளும் நோயைத் தோற்றுவிப்பது இல்லை என்பதே அந்தப் பேருண்மை!

கிருமிகளைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மை

கிருமிகளால் நோய்கள் ஏற்படுவது உண்மையாக இருந்தால், நோய்கள் தோன்றுவதற்கு முன்பு, அல்லது நோய்கள் தோன்றுகிற சமயத்தில், நோயாளியின் உடம்பிலோ, இரத்தத்திலோ, கோழை முதலியவற்றிலோ நோய்க் கிருமிகள் காணப்பட வேண்டும் அல்லவா? அதற்கு நேர்மாறாக, மனிதன் நோய்வாய்ப்படும் சமயத்தில் கிருமிகள் எவையுமே காணப்படாமல் இருந்து பிற்பாடு அவை சாட்சியளிக்குமானால், அதன் பொருள் என்ன?

டக்ளஸ் ஹ்யூம் என்பவர் Bechamp and Pasteur என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பாஸ்டியரின் கிருமி இயல் கொள்கையானது, தவறு என்று விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்ட வரலாற்றுச் செய்திகள் அதில் விளக்கப்பட்டு உள்ளன. கிருமிகளே நோய்களின் தாய் என்றால், தாய் தோன்றிய பிறகு அல்லவா குழந்தை தோன்ற வேண்டும்? அப்படி இல்லாமல், ‘குழந்தை முதலில் பிறந்து விட்டது. அதற்கு அப்புறம் தாய் பிறந்தாள்!’ என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், அந்தத் தாயைத் தாய் என்று சொல்ல முடியுமா? குழந்தையின் மகள் என்று அல்லவா அவளைக் கூறவேண்டும்?

கிருமிகள் என்பவை நோய்களின் தாய் அல்ல, நோய்களின் குழந்தை என்னும் உண்மையை, 1916 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார் ஜான் பி. பிஃரேசர் என்னும் ஒரு புகழ் பெற்ற டாக்டர். இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். Canadian Lancet என்னும் பத்திரிக்கையின் 1916 ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில், தான் கவனித்து வந்துள்ள பல கேள்விகளில், மனிதன் நோய்வாய்ப்படுகிற சமயத்திலே வழக்கமான கிருமிகள் காணப்படுவதில்லை என்றும், சில மணி நேரத்துக்குப் பின்னரே இவைக் காணப்படுகின்றன என்றும், எனவே நோய் தோன்றுவதற்குக் கிருமிகள் காரணமாக இருக்க முடியாது என்றும் ஒரு கட்டுரையில் அவர் தெளிவாக விளக்கி எழுதியுள்ளார்.

‘நோய்க்குக் கிருமிகள் காரணம் அல்ல என்றால் நோய் தோன்றுவதற்கு முன்பு காணப்படாத கிருமிகள் பிற்பாடு ஏன் காணப்பட வேண்டும்?’ என்னும் கேள்வி எழுகிறது அல்லவா?

சீரம்களும் வாக்ஸைன்களும்

வைரஸ்களை முதலில் ஒரு குதிரை அல்லது கழுதை போன்ற மிருகத்தின் இரத்தத்தில் செலுத்தி, அந்த விஷ இரத்தத்தை உறைய வைப்பதால் கிடைக்கும் தெளிவான நீர் தான் சீரம் எனப்படுகிறது. அம்மைநோய் (SMALL POX) வைரஸ்களை உடைய நிண நீர் தான் வாக்ஸைன் எனப்படுகிற அம்மைப்பால். அம்மைப்பாலை உடம்பின் உள்ளே செலுத்துவதன் மூலம், அது செலுத்தப்பட்ட இடத்தில் மட்டுமே இலேசான அம்மை நோய் தோற்றுவிக்கப்படுகிறது என்றும்,

அந்த அம்மை நோயால் தாக்குண்ட வுடனே உடம்பிலே இயல்பாக அமைந்திருக் கின்ற நோய் எதிர்ப்பு சக்தி எழுச்சி அடைந்து அந்த நோய் வைரஸ்களைக் கொல்லக்கூடிய எதிர் விஷயத்தை உற்பத்தி செய்கிறது என்றும், அவ்வாறு ஒருமுறை எதிர் விஷயத்தை உற்பத்தி செய்து பழகிவிட்ட உடம்பானது, பிறகு நீண்டகாலம் வரையில் அம்மை நோயினால் தாக்கப்படமாட்டாது என்றும்; ஒரு சில வேளைகளில் தாக்கப்பட்டாலும் உயிருக்கோ, கண்ணுக்கோ, முகத்தின் அழகுக்கோ ஆபத்து ஏற்படமாட்டாது என்றும்; மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நோய் வைரஸ்களைக் கொல்லுவதற்காக உடம்பிலே உற்பத்தியாகிற எதிர்விஷயத்தை ‘ஆண்டிபாடி’ (Antibody) அல்லது ‘ஆண்டிடாக்ஸின்’ (Antitoxin) என்ற பெயரால் அழைப்பார்கள். அதனுடைய பெயரிலிருந்தே, எதிர் விஷமும் ஒரு விஷப்பொருள்தான் என்று தெரிகிறது அல்லவா? மிருகங்களின் உடம்பிலே நோய் வைரஸ்களைத் தோற்றுவித்து அந்த எதிர் விஷங்களை மனித உடலிலே செலுத்தும்போது அது சீரம் (SERUM) என்று பெயர் பெறுகிறது.

எடுத்துக்காட்டாக டிஃப்தீரியாவுக்கான எதிர் விஷமும் இப்படித்தான் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. அதாவது டிஃப்தீரியாக் கிருமிகளைக் குதிரைகளின் உடம்பினுள்ளே சிறு அளவில் செலுத்துகிறார்கள். உடனே குதிரைகளின் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது, ஓர் எதிர்விஷயத்தை உற்பத்தி செய்து அந்தக் கிருமிகளை அழித்து விடுகிறது. பின்னர் அந்த எதிர்விஷம் அடங்கியுள்ள நிணநீரைக் குதிரையின் உடம்பிலிருந்து தனியாக, எடுத்து, மனிதர்களின் உடம்பிலே செலுத்துகிறார்கள்.

அவ்வாறு செலுத்தப்படுகிற எதிர் விஷமானது, மனிதர்களின் உடம்பில் உள்ள டிஃப்தீரியா (Diphtheria) கிருமிகளைக் கொன்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் நோய் வைரஸ்களை அல்லது கிருமிகளைத் தம் அகத்தே கொண்டு இருப்பவை அம்மைப்பால், பி.ஸி.ஜி. போன்ற வாக்ஸைன்கள் (VACCINES) மிருகங்களின் உடம்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எதிர் விஷங்களைத் தம் அகத்தே கொண்டு இருப்பவை (டிப்தீரியா ஆண்டிடாக்ஸின் போன்ற) சீரங்கள்.

நோய் வருவதற்கு முன்னமேயே அது வந்து விடாமல் தடுப்பதற்கு என்று உடம்பினுள்ளே செலுத்தப்படுபவை வாக்ஸைன்கள். நோய் வந்த பிறகு, அந்த நோயின் கிருமிகளையோ வைரஸ்களையோ கொல்லுவதற்காக என்று உடம்பினுள்ளே செலுத்தப்படுபவை சீரம்கள். இந்த சீரம்களாலும் வாக்ஸைன்களாலும் உண்மையில் விளைவது நன்மையா தீமையா என்பதை இனி நாம் ஆராய வேண்டும்.

முதலில் அம்மை குத்துவதை (VACCINATION) எடுத்துக் கொள்வோம். இப்படிச் செலுத்துவதற்குத்தான் இனாகுலேஷன் (INOCULATION) என்று பெயர். அம்மைப்பால் வைத்தலும் (VACCINATION) ஒரு வகை இனாகுலேஷனே ஆகும்.

அம்மை குத்தும் பழக்கம் எப்படி ஐரோப்பாவில் பரவியது?

அம்மைப்பால் வைத்தல் என்பது, ஏதோ வெள்ளைக்காரர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான ரீதியான மருத்துவமுறை என்று, நம்மில் மிகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் அது வெள்ளைக் காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதும் அல்ல, புதிதான ஒரு மருத்துவ முறையும் அல்ல; விஞ்ஞான ரீதியான மருத்துவ முறையும் அல்ல.

உடம்பிலே பச்சை குத்தினால் நோய் வராது, கதுப்பிலி வைத்தால் நோய் வராது, சூடுபோட்டால் நோய் வராது என்பதைப் போல, அம்மைப்பால் வைத்தால் நோய் வராது என்பது பழங்காலத்து மக்களிடையே நிலவிய ஒரு மூடநம்பிக்கை ஆகும். அந்த மூட நம்பிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் மேல்நாட்டு மருத்துவர்கள்.

பழங்காலத்து மக்களிடையே ஒரு பழக்கம் நிலவி வந்தது என்பதால் மட்டும், அதை நாம் மூட நம்பிக்கை என்று தள்ளிவிட முடியாது. ஏனென்றால், பழமையான பழக்கங்களில் பல, நல்ல விவேகமான அடிப்படையில் அமைந்திருப்பதை நாம் இன்றைக்கும் காணலாம். அத்தகைய விவேகமான பழக்கங்களையெல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள் எனத் தள்ளிவிடும் செருக்கான மனப்பான்மை படைத்தவர்கள் அல்லோபதி மருத்துவர்கள்.

அப்பேர்ப்பட்டவர்களே அம்மைப்பால் வைக்கும் பழக்கத்தை நன்மையானது என ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பார்க்கும்போது மக்களுக்கு அதில் பெருத்த நம்பிக்கை உண்டாயிற்று. மக்களுக்கு ஏற்பட்ட அந்த நம்பிக்கையுமே வெறும் மூடநம்பிக்கைதான்! ஏனென்றால், எதற்கு எடுத்தாலும் விஞ்ஞானம்! ஆராய்ச்சி! என்று கிளிப்பிள்ளைகள்போல் செபித்துக் கொண்டு இருக்கிற அந்த டாக்டர்கள் எந்த ஒரு விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியையும் நடத்திப் பார்க்காமலே அம்மைப்பால் மருத்துவத்தை ஆதரித்தார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியாது! அவர்கள் ஏன் அதை அவ்வாறு ஆதரித்தார்கள் என்பதை நாம் பிற்பாடு கவனிப்போம். அம்மைப்பால் வைக்கும் பழக்கமானது, சீனா, இரான், அரேபியா, துருக்கி போன்ற நாடுகளில்தாம், பழங்காலத்தில் கையாளப்பட்டு வந்தது.

கி.பி.1721-ம் ஆண்டிலே அந்தப் பழக்கத்தை இங்கிலாந்திலே கொண்டுவந்து புகுத்தியவர் ஒரு டாக்டர் அல்லர் அவர் ஒரு சாதாரணப் பெண்பிள்ளை. துருக்கியிலே பிரிட்டிஷ் தூதராக இருந்த ஓர் ஆங்கிலேயரின் மனைவி அவள். லேடி மேரி வார்ட்லி மாண்டேகு (Lady Mary Wortly Montague) என்பது அவள் பெயர். ஏற்கெனவே அம்மை நோய் கண்டவர்களின் புண்களிலே தோன்றுகிற பொருக்குகளை எடுத்து நன்கு பொடி செய்து, அதில் சிறிது தண்ணீரை விட்டுக் குழைத்து, அவ்வாறு குழைக்கப்பட்ட அந்தக் கூழை, இலேசாகக் கீறிவிட்ட தோலின் உள்ளே தேய்த்துச் செலுத்துவதுதான் அவள் கையாண்டமுறை.

அவள் துருக்கியில் கற்றுக்கொண்ட இந்த முறையை இங்கிலாந்தில் வந்து பிரசாரம் செய்தாள். தன்னுடைய சொந்தக் குழந்தைகளுக்கெல்லாம், இதே முறையில் அவள் அம்மைப்பால் வைத்துக் கட்டினாள். உடனே இங்கிலாந்தில் உள்ள பணக்காரக் குடும்பங்கள் அதை ஒரு நவநாகரிக ஃபாஷன் ஆகக் கருதின. பணக்காரர்களைப் பார்த்து, ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும்கூட, அந்த ஃபாஷனைக் காப்பியடிக்க ஆசைப்பட்டார்கள்.

சிறிது காலத்திற்கெல்லாம், இங்கிலாந்தைப் போல் ஐரோப்பக் கண்டத்திலும் அந்த ஃபாஷன் காட்டுத் தீபோல் பரவத் தொடங்கியது. லேடி மாண்டேகு காட்டிக்கொடுத்த முறையைக் கற்றுக்கொண்டு மருத்துவக் கலையைப்பற்றி ஒன்றுமே தெரியாத மனிதர்களெல்லாம், மக்களுக்கு அம்மைப்பால் வைப்பதை ஒரு தொழிலாக மேற்கொண்டிருந்தார்கள், ஒரு தடவை அம்மைப்பால் வைப்பதற்கு, நபர் ஒன்றுக்குப் பத்து ஷில்லிங் கட்டணம் விதித்தார்கள்.

உடனே இவ்வளவு இலாபகரமான ஒரு தொழிலைச் சாதாரண மனிதர்களிடம் விட்டுவைக்கக் கூடாதென்று டாக்டர்கள் வந்து அதைக் கைப்பற்றிக் கொண்டார்கள்! எனவே, அம்மைப்பால் வைப்பது ஓர் இலாபகரமான தொழில் என்பதற்காக டாக்டர்கள் அதை ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டார்களே அன்றி தங்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறியப் பட்ட எந்த ஓர் உண்மையின் அடிப்படையிலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

டாக்டர்கள் அம்மைப்பால் வைத்த போதும், சாதாரண மனிதர்கள் அம்மைப்பால் வைத்தபோதும், பலன் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது... அதாவது, ஒருவர் அம்மைப்பால் வைத்துக் கொண்டால் உடனே அவருக்கு அம்மைக் காய்ச்சல் ஏற்பட்டது. பால் வைத்த இடத்தில் அம்மைக் கொப்புளங்களும் உண்டாயின. சில நாள்களுக்குப் பிறகு காய்ச்சல் குறைந்து கொப்புளங்களும் வெடித்துப் புண் ஆயின. அவை ஆறின பின்புகூட அந்த இடத்தில் ஆயுள்வரை நீங்காத தழும்புகள் விழுந்து விட்டன.

இப்படித் தழும்பு விழுந்தவர்களுக்கு மறுபடியும் ஆயுள் முழுவதும் அம்மை நோயே வராது என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக்கூற்று உண்மையல்ல என்பது மக்களின் அனுபவத்தில் காணப்பட்டது. அது மட்டும் அல்ல, அம்மைப்பால் மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடங் களில் எல்லாம், பெரும் அளவில் அம்மை நோய் தோன்றி, உயிர்களைக் கொள்ளை கொள்ளல் ஆயிற்று! இதனால், மக்களுக்கு அம்மைப்பால் மருத்துவத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. ஏதோ இங்கும் அங்கும் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோருமே அம்மைப்பால் வைத்துக்கொள்ள மறுத்து விட்டார்கள். ஆனால், டாக்டர்களின் வரு மானமும் திடீர் என்று வீழ்ச்சி அடைந்தது;

இவ்வாறு ஏறத்தாழப் பதினாலு ஆண்டுக்காலம் டாக்டர்கள் தங்கள் அருமையான வருமானத்தை இழந்து விட்டிருந்தனர். அந்த சமயத்தில்தான் ஜென்னர் என்ற ஒரு புண்ணியவான் தோன்றினார்.

ஒரு பேதைச் சிறுமியின் பிதற்றலை நம்புவதா?

ஜென்னரை டாக்டர் ஜென்னர் என்று சில மருத்துவ நூலாசிரியர்கள் கூடத் தவறாகக் குறிப்பிடுகிறார்கள்.. உண்மையில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு டாக்டர் அல்ல. அந்தக் காலத்தில், சில மருந்துக் கடைக்காரர்கள்கூட லைசென்ஸ் பெற்று வைத்தியம் செய்தார்கள். அவர்களுக்கு அப்பாத்தக்கரிகள் என்று பெயர். அத்தகைய ஓர் அப்பாத்தக்கரிதான் ஜென்னர் என்பவர். அவர் ஒருநாள் கிராமிய இளம்பெண் ஒருத்தியைச் சந்திக்க நேர்ந்ததாம்.

எனக்கு ஏற்கெனவே கோமாரி நோய் வந்து குணம் ஆகியிருக்கிறது. ஆகையால், இனிமேல் எனக்கு வைசூரிநோய் வராது என்று அவள் பேச்சோடு பேச்சாகக் கூறினாளாம். உடனே ஜென்னரின் மூளையானது வேலை செய்யத் தொடங்கியதாம். மனித உடம்பில் செயற்கை முயற்சியில் கோமாரி நோயை உண்டு பண்ணிக் குணம் ஆக்கிவிட்டால் அப்புறம் வைசூரி நோய் அவர்களுக்கு வராது என்று அவர் தீர்மானித்தாராம். எனவே மனித இனத்தை வைசூரியிலிருந்து காப்பாற்ற வேண்டு மானால், கோமாரி நோய் கண்ட பசுவின்நிணநீரை மனித உடம்பினுள்ளே செலுத்தி அவர்களுக்குக் கோமாரி நோயை வழங்குவது ஒன்றேதான் வழி என்னும் ஒரு புதிய கொள்கையை அவர் வெளியிடலானார்.

இதில் உள்ள அடிப்படைத் தவறு என்னவென்றால் பசுக்களுக்கு வருகிற கோமாரி நோயும், மனிதர்களுக்கு வருகிற வைசூரி நோயும் ஒரே நோய் அல்ல. கௌபாக்ஸ் எனப்படுகிற கோமாரி, காளைகளுக்கோ இளங்கன்றுகளுக்கோ வருவது இல்லை. பசுக்களுக்கு மட்டும், அவற்றின் பால்காம்புகளில் அது தோன்று கிறது. பால் கறப்பவர்களின் கைகளில் உள்ள அழுக்குகளே அதற்குக் காரணம் ஆகும். அதைப் புரிந்துகொள்ளாமல், பசுக் களுக்கு வருகிற வைசூரியே கோமாரி, என்று கூறினார் ஜென்னர். அப்படியானால், காளை களுக்கும் இளங்கன்றுகளுக்கும் அது ஏன் வருவது, இல்லை என்பதற்கு, இன்றுவரை எவரும் விளக்கம் கூறவில்லை.

கி.பி.1780 முதல் பதினாறு ஆண்டுகளாக வருமானம் குன்றிப் போயிருந்த மருத்துவ உலகத்துக்கு, ஜென்னரின் கொள்கை ஒரு புதிய நம்பிக்கை ஊட்டும் ஒளிவிளக்குப் போல் வந்து சேர்ந்தது. கோமாரியும் வைசூரியும் ஒரே நோயாக இருந்தால் தான், ஜென்னரின் கொள்கைப் படியே, முதலில் கோமாரி தாக்கப்பட்ட உடம்பு, பிற்பாடு வைசூரியால் தாக்கப்படாமல் தப்ப முடியும்.

இரண்டும் வெவ்வேறு நோய்களாக இருந்து விட்டால், ஜென்னரின் கொள்கைப்படியே முதலில் ஒரு நோயால் தாக்கப்பட்டி ருந்தாலும் அதே உடம்பு பிற்பாடு, மறு நோயினால் தாக்கப்படாமல் தப்பமுடியாது. ஆகையால், கோமாரியும் வைசூரியும் ஒரே நோய்தான் என்பதை விஞ்ஞான ரீதியாக மெய்ப்பித்தாலொழிய, ஜென்னருடைய புதிய கொள்கையின் அடிப்படையே தளர்ந்துபோய் விடுமே என்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த அச்சத்தின் விளைவாக, அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். செய்தும்கூட, கோமாரியும் வைசூரியும் ஒரே நோய்தான் என்று அவர்களால் விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்க முடியவில்லை. (அன்று மட்டும் அல்ல, கோமாரியும் வைசூரியும் ஒரே நோய்தான் என்று இன்று வரையிலும்கூட விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்படவில்லை.)

அந்த நிலையில் மனச்சான்று படைத்த மருத்துவ விஞ்ஞானிகளாய் இருந்தால், ஜென்னரின் சித்தாந்தத்தை அவர்கள் ஜன்னலுக்கு வெளியே வீசி எறிய வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக, கோமாரியும் வைசூரியும் ஒரே நோய்தான் என்று ஐயம் திரிபுக்கு இடம் இன்றி மெய்ப்பிக்கப்பட்டு விட்டாற்போல். ஜென்னரின் சித்தாந்தத்துக்கு யாதொரு மறுப்பும் கூறாமல், மருத்துவ உலகம் அதை விரும்பி ஏற்றுக்கொண்டது.

காரணம் அதிலே அவர்களுக்கு நல்ல வருமானம் இருந்தது! எனவே 160 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பட்டிக்காட்டுச் சிறுமி தன் பேதைமையால் பிதற்றிய ஒரு பேச்சை ஆதாரமாகக் கொண்டு தான்... வாக்ஸினேஷன் (VACCINATION) இனாகு லேஷன் (INOCULATION) என்றெல்லாம் பெருமையோடு பேசப்படுகிற இன்றையத் தடுப்பு ஊசி மருத்துவ முறைகள் அனைத்துமே நடைபெறுகின்றன என்பது, எவராலும் மறுக்க முடியாத மாபெரும் உண்மை ஆகும்.!

அம்மை குத்தலுக்கு வாக்னிஸேஷன் என்ற பெயரைக் கொடுத்தவரே ஜென்னர் தான். லத்தீன் மொழியில் வாக்ஸினஸ் என்றால், பசு எனப் பொருள்படும்.

ராயல் கமிஷன் ஏற்பட்ட வரலாறு

அம்மைக் குத்தினவுடன் உடலில் காய்ச்சலும் குத்தின இடத்தில் கொப்புளங் களும் தோன்று கின்றன. அல்லவா? அந்த நோயை வாக்ஸினியா என்று அழைப்பார்கள். கோமாரி எனப்படும் கௌபாக்சுக்கு வழங்கப்படுகிற பெயரும் வாக்ஸினி யாதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அம்மைப்பால் குத்துவதன் மூலம், நம்முடைய குழந்தைகளின் தூய்மையான உடம்பில், பசுக்களுக்கு மட்டும் உள்ள எருது களுக்கும் கன்றுகளுக்கும் கூட இல்லாத கோமாரி நோய் தோற்றுவிக்கப்படுகிறது. ஜென்னரின் கொள்கைப்படியேகூட, உடம்பிலே முதலில் தோன்றுகிற வைசூரி நோய் தான், பிற்பாடு அதே நோய் அதே உடம்பில் தோன்றாத படிக்குக் காப்பாற்றுமே தவிர முதலில் தோன்றுகிற வேறொரு நோய், பிற்பாடு அதே உடம்பில் வைசூரி தோன்றாமல் காப்பாற்ற மாட்டாது.

எனவே, முதலில் செயற்கையாகத் தோற்றுவிக்கப்படுகிற கோமாரி நோய், பிற்பாடு அதே உடம்பில் வைசூரி தோன்றாமல் காப்பாற்றி விட முடியும் என்று ஜென்னரும் டாக்டர்களும் கருதியது, அனுபவத்திலே பார்க்கும்போது பெரும் தவறாக முடிந்தது! இப்படி நான் செல்லவில்லை. ஆதாரப் பூர்வமாக புள்ளி விவரம் ரிக்கார்டுகள் கூறுகின்றன. ஜென்னரே, தம்முடைய கடைசிக் காலத்தில் ஒருமுறை அம்மை நோய் கண்டவர்களுக்கு இரண்டாவது முறையாக அம்மை வராது எனக் கருதுவது தவறு என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்படி இரண்டாவது முறையாக அம்மை கண்டவர்களின் பட்டியல் ஒன்றையே அவர் தயாரித்தார். அந்தப் பட்டியலில் ஆயிரம் கேஸ்களுக்கு மேல் இடம் பெற்றிருக்கின்றன. 1889ஆம் ஆண்டில், அம்மை குத்துதலின் விளைவுகளைப் பற்றிய ஆராய்வதற்காக, இங்கிலாந்தில் ராயல் கமிஷன் (Royal commission on VACCINATION) என ஒன்று நியமிக்கப் பட்டது. அந்தக் கமிஷன் 1896-ல் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒரு சுவையான தகவல் அடங்கியிருந்தது.

அதாவது ஸ்விட் ஜர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் அடால்ஃப் வாக்ட் என்னும் ஒரு போராசிரியர், ஐரோப்பாக் கண்டம் முழுவதுக்குமான புள்ளி விவரங்களை அலசி ஆராய்ந்து கணக்கு எடுத்துக்காட்டி, முதல் தடவையாக அம்மை நோய்க்கு ஆளாகிறவர்களைக் காட்டிலும், அதே நோய்க்கு இரண்டாவது தடவை யாக ஆளாகிறவர்களின் எண்ணிக்கைதான் மிகுதியாக இருக்கிறது என்று தாம் கமிஷனுக்கு அனுப்பியிருந்த குறிப்பு ஒன்றில் தெளிவாக விளக்கியிருந்தார். அதாவது, ஒருவருக்கு அம்மை நோயே வராமல் இருந்தாலும் இருக்கலாமே தவிர ஒருமுறை வந்துவிட்டால், அதே நபருக்கு மறுமுறையும் அது வருவதற்கு நிரம்ப வாய்ப்பு இருக்கிறது என்பதுதானே இதன் பொருள்?

இயல்பாக அம்மை வார்த்தவர்களுக்கோ அது இரண்டாவது முறையும் வரும் என்னும்போது, செயற்கை முறையில் அம்மை குத்திக் கொண்டவர்களுக்கு அது வராது எனக் கூறுவது, எவ்வளவு பெரிய பேதமை பாருங்கள்! இதைக் கருத்தில் கொண்டதன் விளைவாகத் தான் மருத்துவ விஞ்ஞானிகள் பிற்பாடு ஒரு நொண்டிச் சமாதானத்தை வெளியிட வேண்டியது ஆயிற்று. அதாவது, அம்மை குத்திக் கொண்டவர்களுக்கும் கூட சிறிது காலத்துக்குப் பிறகு அம்மை நோய் வரலாம், இப்படியே வந்தாலும், அது இவர்களுடைய உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணாது. கண்களைக் குருடு ஆக்காது முகத்தை விகாரப்படுத்தாது என்று இவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்.

ஆனால் இந்த விளக்கம் எவ்வளவு பொய்யானது என்பதையும் புள்ளி விவரங்களே மெய்ப்பிக்கின்றன. கி.பி.1798ஆம் ஆண்டு வாக்கில் அம்மை குத்தும் நவீன முறையை ஜென்னர் துவக்கி வைத்தார். அடுத்த எட்டு ஆண்டுகளுக்கெல்லாம், (அதாவது 1806-ல்) அம்மை ஒரு கொள்ளை நோயாகப் பரவத் தொடங்கியது. பின்னர், சிற்சில ஆண்டுகள் விட்டுவிட்டு, அது மீண்டும் மீண்டும் கொள்ளை நோய் வடிவத்திலேயே வந்து தாக்கிக் கொண்டு இருந்தது.

இப்படி அது வருகிற ஒவ்வொரு தடவையும், அதற்கு முந்தின தடவையைக் காட்டிலும் கடுமையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. இவ்வளவுக்கும் காரணம் ஜென்னர் கண்டுபிடித்த அம்மைப்பால் என்பதை எவருமே உணரவில்லை. அதற்கு மாறாக மக்கள் கூடுதலான எண்ணிக்கையில் அம்மை குத்திக் கொள்ளா ததுதான், அம்மை நோய் மேலும் மேலும் பெருகி வருவதற்குக் காரணம் என்று கூறியது மருத்துவ உலகம்! அதை நம்பி, 1853-ம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கட்டாயமாக அம்மை குத்திக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் ஒரு சட்டம் பிறப்பித்தது.

அதற்கு முன்னர் சிற்சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த அந்தக் கொள்ளை நோய், அதற்குப்பிறகு ஆண்டு தோறும் தவறாமல் வரத் தொடங்கியது. உயிர்களை மேலும் மேலும் கூடுதலான அளவில் கொள்ளை கொள்ளல் ஆயிற்று. 1871-ல் அது முன் எப்போதைக் காட்டிலும் மிகப் பெரிய கொள்ளை நோயாகக் காட்சி அளித்தது. அம்மை குத்தப்பட்டவர்களே 42 ஆயிரம்பேர் அதில் இறந்து போனார்கள். இவ்வளவுக்கும் காரணம், அம்மைப் பாலே என்னும் உண்மை அப்போதுதான் மக்களுக்குப் புலப்பட்டது.

உடனே அவர்கள் புரட்சி செய்யத் தொடங்கினார்கள். அம்மை குத்திக் கொள்ள மாட்டோம் என்று மறுத்தார்கள். அதற்காக அரசாங்கம் இவர்களைக் கைது செய்து வழக்குத் தொடுத்தது. இருந்தாலும் மக்கள் அடங்கவில்லை. அவர் கள் தொடர்ந்து சட்ட மறுப்புச் செய்து கொண்டே இருந்தார்கள். அதன் பிறகுதான், அம்மை குத்திக் கொள் வதன் விளைவுகளை ஆராய்வதற்காக, 1889-ல் மேலே குறிப்பிட்ட ராயல் கமிஷன் நியமிக்கப் பட்டது.

இது மோசடியா, பேதைமையா?

அந்தக் கமிஷனில் அம்மை குத்துவதை ஆதரிப்பவர்களே பெரும்பாலோராக இடம் பெற்றிருந்தனர். அப்போது இருந்த கன்சர்வேடிவ் அரசாங்கம் வேண்டும் என்றே அவர்களுக்கு அவ்வாறு இடம் அளித்திருந்தது. அப்படி இருந்தும் ஏழு ஆண்டுக்கால விசாரணைக்கும் பிறகு, விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தி அம்மை குத்தவேண்டாம் என்று, அந்தக் கமிஷன் அரசாங்கத்துக்குக் சிபாரிசு செய்தது. எனவே, 1898-ல் அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி, ஒருவர் தனக்கு மனப்பூர்வமான விருப்பம் இல்லை என்று இரண்டு மாஜிஸ்டிரேட்டுகளைத் திருப்திப்படுத்துவாரானால் அவர் தன் குழந்தைக்கு அம்மை குத்திக்கொள்ள வேண்டியது இல்லை என ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இந்த விதிவிலக்கு நடைமுறையில் செல்லாக் காசாக விளங்கியது. காரணம் மாஜிஸ்ட்ரேட்டுகள் பெரும்பாலும் திருப்திப் படுவது இல்லை. அவர்கள் திருப்திப்படுவதை அரசாங்கம் விரும்பமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகையால், கட்டாய அம்மை குத்துதல் வழக்கம் போலவே தொடர்ந்து நடைபெற்று வந்தது. மக்களின் சட்டமறுப்பும் வழக்கம் போலவே தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடைசியாக 1905-ல் நடந்த பொதுத் தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சி வீழ்ச்சி அடைந்தது; லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டிலேயே, பிரிட்டனில் அரை நூற்றாண்டுக் காலத்துக்குமேல் அமலில் இருந்த கட்டாய அம்மை குத்தும் சட்டம் ஒழிக்கப்பட்டது.

அதற்கு அப்புறம்தான் அம்மை நோயும் அந்த நாட்டைவிட்டு ஒழியத் தொடங்கியது. எனவே, பிரிட்டனில் அம்மை நோய் ஒழிக்கப்பட்டது அம்மைப்பால் மருத்துவத்தின் விளைவாக அல்ல, அந்த மருத்துவத்தை நிறுத்தியதன் விளைவாகத் தான் என்று தெரிகிறது அல்லவா? இந்த உண்மையை இருட்டு அடிப்பு செய்கின்றனர் இன்று உள்ள பெரும்பாலான ஆங்கில மருத்துவ நூலாசிரியர்கள். இன்னும் சொல்லப் போனால் உண்மையை அவர்கள் திரித்துக் கூறுவார்கள்.

மருத்துவ உலகின் மடத்தனத்தை மெய்ப்பிக்கும் சில புள்ளி விவரங்கள்

1889- வருடாந்திய ராயல் கமிஷனின் விசாரணையின் போது, அம்மைப்பால் வைத்த தன் விளைவாக எண்ணற்ற குழந்தைகள் இறந்து விட்டதும், ஏராளமான குழந்தைகள் கண் பார்வை இழந்து விட்டதுமான செய்திகள் வெளியாயின. அதனால் அந்தக் கமிஷனானது விருப்பம் இல்லாத பெற்றோர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்துக்குச் சிபாரிசு செய்தது.

18-ஆம் நூற்றாண்டின் முடிவிலே ஜென்னர் தன்னுடைய அம்மைப்பால் மருத்துவத்தை முதன் முதலாகப் புகுத்தினார். அதன் விளைவாக 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலே 79 ஆயிரம் பேர் அம்மை நோய் கண்டு உயிர் இழந்தார்கள். அதற்குமுன் எந்த ஒரு நூற்றாண்டிலுமே அந்த நோய்க்கு இவ்வளவு பேர் இரையானது இல்லை. 1907-ல் கட்டாய அம்மைகுத்தல் கைவிடப்பட்ட பிறகு, 1936 வரையிலான முப்பது ஆண்டுகளில் பிரிட்டனிலே, 100 இலட்சம் குழந்தைகளுக்கு அம்மை குத்தப்பட்டது. 180 இலட்சம் குழந்தைகளுக்கு அம்மை குத்தப்படவில்லை.

இந்த 180 இலட்சம் குழந்தைகளில், வெறும் 86 குழந்தைகள் தாம் வைசூரியால் இறந்தன. ஆனால்,227 குழந்தைகள் அம்மை குத்திக் கொண்டதன் விளைவாக இறந்து விட்டன! அதாவது இயல்பாகவே வைசூரி கண்டு இறக்கும் குழந்தைகளைக் காட்டிலும், அம்மை குத்திக் கொள்வதால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்குக்குமேல் கூடுதலாக இருக்கிறது.

1934 முதல் 1936 வரையிலான 3 ஆண்டுகளில், இங்கிலாந்திலும் வேல்ஸிலும் சேர்ந்து மொத்தம் 638,924 குழந்தைகளுக்கு அம்மை குத்தினார்கள். 904,316 குழந்தைகளுக்கு அம்மை குத்தாமல் விட்டு விட்டார்கள். அம்மை குத்தப்பட்ட 6 இலட்சத்துச் சொச்சம் குழந்தைகளில், அம்மைப்பாலின் வேகம் தாங்காமல் 11 குழந்தைகள் இறந்து விட்டன! ஆனால், அம்மை குத்தப்படாத 9 இலட்சத்துச் சொச்சம் குழந்தைகளில், ஒரு குழந்தைகூட வைசூரி நோய் கண்டு இறக்கவில்லை!

இவை எல்லாம் என் கற்பனையிலிருந்து உருவாகிய செய்திகள் அல்ல. பிரிட்டிஷ் அரசாங்க ரிக்காடுகளில் உள்ள ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்கள்! எவ்வளவு பெரிய மருத்துவ விஞ்ஞானிகளாலும் மறுக்க முடியாத உண்மைகள்! இங்கிலாந்தில் கட்டாய அம்மை குத்துதல் அமுலில் இருந்த காலத்திலேயே, லீசெஸ்டர் என்னும் பெரிய தொழில் நகரத்தைச் சேர்ந்த மக்கள், கட்டுப்பாடாக அம்மை குத்திக் கொள்வதில்லை என்று இருந்து விட்டார்கள். 1871 - 72-ல் ஏற்பட்ட கொள்ளை நோய்க்குப் பின்னரே அவர்கள் சட்டத்தை மீறுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

28 ஆண்டுகள் ஓடி மறைந்தன. அந்த 28 ஆண்டுகளில், லீசெஸ்டர் நகரிலே 11/2 இலட்சம் குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் 20 ஆயிரம் குழந்தைகளுக்கு மட்டுமே அம்மைப்பால் வைக்கப்பட்டது. அவ்வூரில் அடிக்கடி வைசூரி வந்தது. மூன்று தடவைகளில் அது ஒரு கொள்ளை நோயாகவே வடிவு எடுத்தது. ஆனால் அந்தக் கொள்ளை நோய் யாரைத் தாக்கியது தெரியுமா? அம்மைப்பால் வைத்துக்கொண்டார் களே இருபதாயிரம் குழந்தைகள், அவர்களைத் தான் அது தாக்கியது! அம்மை குத்திக்கொள்ளாத மீதி 130 ஆயிரம் குழந்தைகள் இருந்த பக்கத்தில், அந்த நோய் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!

அம்மை குத்திக்கொள்ளாவிட்டால் வைசூரி நோய் வந்துவிடும் என்று டாக்டர்கள் நம்மைப் பயமுறுத்துவதையும், அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம் குழந்தைகளுக்கு அம்மைக் குத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் நம்மைக் கட்டாயப்படுத்துவதையும், போன்ற மடத்தனம் உலகில் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

நன்றி: “இயற்கை வைத்தியம்” மணிமேகலை பிரசுர நூல்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com